தேனி: பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி மலைப்பகுதியில் 20 நாள்களுக்கு முன்பு தனியார் தோட்டத்தில் உள்ள மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இது குறித்து விசாரணை செய்த வனத்துறையினர் தோட்டத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் உள்பட மூவர் இந்த தோட்டத்திற்கு உரிமையானவர்கள் எனத் தெரியவந்து.
இந்த விவகாரம் விஸ்வரூபம் ஆன நிலையில் இது தொடர்பாக ரவீந்தரநாத் எம்.பி.யின் தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத்திருந்த ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் தோட்டத்தின் மேலாளராக இருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகத் தோட்டத்தின் உரிமையாளரான தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த விவகாரத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ் செல்வன் தலைமையிலான திமுகவினரும் ரவீந்தரநாத் மீது நடவடிக்கை எடுக்கத் தேனி மாவட்ட வனத்துறை அலுவரிடம் மனு அளித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்ய வேண்டும் என்றால் மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்று தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்தா கூறியிருந்தார். இந்நிலையில், வனத்துறை சார்பில் தோட்டத்தின் உரிமையாளர்களான ரவீந்தரநாத் எம்பி, காளீஸ்வரன் தியாகராஜன் ஆகிய மூவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: மீனவர்களை இந்திய கடற்படையே தாக்கியது வருந்தத்தக்கது - தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கருத்து