நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாட்டுப்புற கலைஞர்களும் விதிவிலக்கல்ல. தேனி மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு வழங்கினர்.
முன்னதாக, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் மேளதாளம், நாதஸ்வரம், தப்பாட்டங்களை இசைத்தவாறு ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் நான்கு நபர்கள் மட்டும் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளிப்பதற்கு காவல்துறையினர் அனுமதித்தனர். இது குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் கூறுகையில், ”தமிழ்நாட்டில் நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றோம். பொது முடக்கத்தால் கடந்த நான்கு மாதமாக வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். எங்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியினரும் உதவிகள் செய்யவில்லை.
இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்கும் நிவாரண உதவித் தொகையாக குடும்பத்துக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். எங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைவில் ஏற்று நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் காத்திட வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: 270 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் புக் மை ஷோ