தேனி: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கம் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு நிபுணர் குழுவாலும், சட்ட வல்லுநர்களாலும் முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை ஆராயப்பட்டது. அதன்பிறகு, 2014ஆம் ஆண்டு 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்திரவிட்டது.
உச்ச நீதிமன்ற ஆணை...
மேலும் பேபி அணையை பலப்படுத்திய பிறகு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணையை கட்டுவதற்கு கேரள அரசு விரும்பினால், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று, அந்தக் கடிதத்தை இணைத்தே மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
கேரளாவைச் சேர்ந்த நீதிபதிகளான கே.சி.தாமஸ், பொறியாளர் அ.ம. பரமேஸ்வரன் நாயர், மூத்த அரசு வழக்கறிஞர் கே.பி.தண்டபாணி உள்ளிட்டவர்களே முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை தேவையில்லை என்கிற கருத்தை கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து பெரியாறு அணையை தகர்த்தெறிவோம், புதிய அணையை கட்டுவோம் என்று சிலர் முழங்குவது அபத்தமானது.
போரைச் சந்திக்க நேரிடும்...
இச்சூழலில், 2885ஆம் ஆண்டு வரை முல்லைப் பெரியாறு அணைக்கான குத்தகை காலம் இருக்கும் நிலையில், அணையை தகர்ப்போம் என்று அறுதியிடுவது ஏற்புடைய செயலல்ல. நாட்டின் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளையே, தூக்கி எறியும் கேரளாவின்; அடாவடித்தனங்களை நிறுத்தாவிட்டால் 1956ஆம் ஆண்டுநடத்தப்பட்ட மோசடியான மொழிவழி பிரிவினையை எதிர்த்து, ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் போர் ஒன்றை நடத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும்.
மேலும், புதிய அணைக்கான ஆய்வை மேற்கொள்வதற்காக கேரள அரசால் பணிக்கப்பட்ட நிறுவனம், உடனடியாக அந்த ஆய்வில் இருந்து வெளியேற வேண்டும். ஏற்கனவே ஒரு லட்சத்து 28 ஆயிரம் ஏக்கர்கள், பெரியாறு பாசன பரப்பில் தரிசாக மாறிவிட்ட நிலையில் மறுபடியும் ஐந்து மாவட்ட விவசாயிகளையும், கேரள அரசு வஞ்சிக்க நினைத்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
எனவே, கேரள அரசின் எதேச்சதிகார போக்கை கண்டித்து, நவம்பர் 27ஆம் தேதி ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.
முல்லை பெரியாறு விவகாரம்...
கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தமிழ்நாட்டின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அணை பலகீனமடைந்து விட்டதாகவும், அதற்கு மாறாக புதிய அணை கட்டப்பட வேண்டும் எனவும் கேரளாவில் பொய் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வேளையில், கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக இணையதளம் வாயிலாக கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கம் இந்த மேற்குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.