கரோனா தீநுண்மி தொற்று காரணமாக நாடு முழுவதும் வரும் மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில், விவசாயப் பணிகளுக்கு விலக்களிக்கப்பட்டு விவசாயிகள் சென்றுவருவதற்கு அண்மையில் அடையாள அட்டை வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினர் நேற்று அடையாள அட்டை வழங்கினர். பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள விவசாயிகள் சங்க மண்டபத்தில் வழங்கப்பட்ட இந்த அடையாள அட்டையைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
இதனால் அங்கு தகுந்த இடைவெளி கேள்விக்குறியானது. இது குறித்து தகவலறிந்த கரோனா தடுப்பு சிறப்பு அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து அடையாள அட்டை வழங்குவதைத் தடுத்து நிறுத்தினார்.
மேலும், விவசாயிகளுக்கு இன்று காலை வடுகபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையாக வழங்கப்படும் என்றும் அப்போது விவசாயிகள் முறையாகத் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் விவசாயிகள் தங்களுக்கு உரிய அடையாள அட்டைகளை விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்து அவர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க: மே 31ஆம் தேதி வரை விளைப்பொருள்களை இலவசமாகச் சேமிக்கலாம்! - தேனி ஆட்சியர் அறிவிப்பு