தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது சிகு ஓடைக் கண்மாய். சுமார் 110ஏக்கர் பரபரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் நேரடி பாசன வசதி கிடையாது. பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக கண்மாயின் நீர் நிரப்பப்படாமல் வறண்டு காணப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியினர், மாவட்ட நிர்வாகம், துணை முதலமைச்சர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமாரிடம் அளித்த புகாரின் பேரில், அவர் இன்று சிகு ஓடை கண்மாயை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம், கண்மாய்களை தூர்வாரி வருவதாக கூறுகிறது. ஆனால் 10 வருடங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்படும் சிகு ஓடையில் நீர் நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததது அரசின் பாராமுகத்தை காட்டுகிறது. பொதுமக்கள் நலன் கருதி சிகு ஓடை கண்மாயில் தண்ணீர் நிரப்புவதற்கான பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி தம்புரான் கானல் கால்வாய் வழியாக வருகின்ற தண்ணீரேத் தான் சிகு ஓடை கண்மாயில் நிரப்பப்படுவது வழக்கம். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக 18கிராம மக்களின் நீராதாரமாகத் திகழந்த இக்கண்மாயின் நீர்வழிப்பாதையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பொதுப்பணித் துறையினரால் தடுப்பணை கட்டப்பட்டது.
மழை காலங்களில் வரும் நீரை அல்லிநகரம் மந்தைக்குளத்திற்கு முதல் 40 - 45நாட்கள் திருப்பப்படுகிறது. அதன் பிறகு மழையளவு குறைந்து விடுவதால் சிகு ஓடைக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கடந்த 10வருடங்களாக தண்ணீரின்றி சிகு ஓடை வறண்டு காணப்படுகிறது. நீர் நிரம்பாததால் ஆக்கிரமிப்பின் பிடியில் கிடந்த இக்கண்மாயை பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ. 25லட்சம் மதிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு தூர்வாரினோம். எனவே மழை காலங்களில் ஏற்படும் நீர்வரத்தை முறையாக விநியோகித்து சிகு ஓடை கண்மாய் நிரம்புவதற்கு வழி செய்திட வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க பாஜக கோரிக்கை