தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு மாடுகள், மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது மலையை ஒட்டியுள்ள தோட்டங்களில் இறங்கி வருவதுண்டு.
இந்நிலையில், சோத்துப்பாறை அணைக்கு மேல் உள்ள அகமலை ஊராட்சிக்குட்பட்ட மருதையனூர் எனும் மலைப்பகுதியில் விவசாயி முனியாண்டி தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மலையில் இருந்து தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு மாடு ஒன்று, முனியாண்டியை முட்டித் தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். இருந்தும் சரியான சாலை வசதியில்லாததால், அங்கிருந்து சுமார் 7 கி.மீ தூரம் டோலி கட்டி சோத்துப்பாறை அணைக்கு கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் முனியாண்டியை தேனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரத்தப் போக்கு அதிகமாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் முனியாண்டி இருப்பதாக கூறி, அவரை அவசர மேல் சிகிச்சைக்காக மதுரை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு மாடு தாக்கி விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பெரியகுளம் பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகள் மீதான காவல் துறையினரின் அடக்குமுறைகளைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பட்டம்!