தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் தன் மனைவியின் பெயரில் கொடைக்கானல் பகுதியில் நிலம் வைத்திருந்தார். தனக்குச்சொந்தமான நிலத்தை தன் மகளின் திருமணச்செலவிற்காக 2010ஆம் ஆண்டு விற்பனை செய்ய முடிவு செய்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தான் அந்த சொத்தை வாங்கிக்கொள்வதாக பெரியகுளத்தைச்சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மூலம் முனியாண்டியிடம் கூறியுள்ளார்.
பின்னர் அவர் சொத்தின் மதிப்பான ரூ.40 லட்சத்தை பத்திரம் பதியும் அன்றே கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய முனியாண்டி, கிருஷ்ணன் என்பவர் பெயரில் பவர் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். அதன் பின் அவர் சொன்னபடி பணம் தரவில்லை. இதுகுறித்து ஓ.ராஜாவிடம் கேட்டபோது 'இன்னும் மூன்று மாத காலங்களில் உங்கள் பணத்தை தந்து விடுவேன்' என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணன் என்பவருக்கு எழுதி கொடுத்த பவர் பத்திரத்தை அவர் பெரியகுளத்தைச்சேர்ந்த விஜயகுமார் என்பவர் பெயரில் பத்திரம் பதிவு செய்துள்ளார். இதையடுத்து மீண்டும் ஓ.ராஜாவிடம் முனியாண்டி பணத்தைக்கேட்டபோது, 'உங்கள் பணத்தை எல்லாம் தரமுடியாது' என்றும்; 'தான் அரசியலில் செல்வாக்குடன் இருப்பவன்; மீறி என்னிடம் பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன்' எனக்கூறியதாக முனியாண்டி கூறினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்ததாலும் ஓ.ராஜா பெரியகுளத்தில் சேர்மனாக இருந்ததாலும் தாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர் கூறினார். மேலும் அந்த சொத்து மதிப்பு தற்போது இரண்டு கோடி ரூபாய் என்றும்; தங்கள் சொத்தை மீட்டுத்தருமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப்பொதுச்செயலாளராக செயல்படத் தடை விதிக்கக்கோரி மனு!