தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்த்து, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இவற்றில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் (தனி) மற்றும் ஆண்டிபட்டி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பெரியகுளம் தொகுதிக்கு அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கதிர்காமு மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான இன்று தனது வேட்புமனுவை தேர்தல் உதவி அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
முன்னதாக பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் வருகை தந்து, தேர்தல் அலுவலர் அறைக்குச் சென்ற கதிர்காமு, தற்போது நல்ல நேரம் இல்லாததால் 15 நிமிடம் கழித்து வேட்புமனுவை தாக்கல் செய்தவதாக அலுவலரிடம் கூறிச்சென்றார். சிறிது நேரம் அலுவலகத்திலே காத்திருந்து பின்னர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நான் இந்தத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் நிறுத்தப்பட்டுள்ளாதால், அவர்கள் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளனர். இதனால் தங்களின் வெற்றிவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.