தேனி: மதுபோதையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில், முன்னாள் ராணுவ வீரரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் 50 தோட்டாக்களை ஜெயமங்கலம் காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரனையில் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் சடையாண்டி. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவரிடம், வடுகபட்டியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற முன்னாள் ராணுவ வீரர், முன்விரோதம் காரணமாக மதுபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில், முன்னாள் ராணுவ வீரர் மகேந்திரன், தனது இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, சுட்டு கொலை செய்து விடுவேன் என சடையாண்டியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சடையாண்டி ஜெயமங்கலம் காவல் நிலையத்தில், தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஜெயமங்கலம் காவல்துறையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் மகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து, அவரிடம் இருந்து ரிவால்வர் எனப்படும் கைத்துப்பாக்கி மற்றும் 50 தோட்டாக்களையும் பறிமுதல் செய்து, பெரியகுளம் சார்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரை, மற்றொரு முன்னாள் ராணுவ வீரர் மது போதையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.. துபாய் குருவிகள் சிக்கியது எப்படி?