தமிழ்நாட்டில் நாளை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இன்று வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டன.
குதிரைகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் போடி தாலுகா குரங்கணி அருகே டாப்ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன், மாங்காய்பள்ளம், புல்லனூர், மேல்முட்டம், கீழ்முட்டம், கேளையாட்டுபள்ளம், முதுவாக்குடி, பச்சையாத்துக்கானல் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்கள், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்குச் செல்வதற்கு போடியில் இருந்து குரங்கணி வரை மட்டுமே சாலைப்போக்குவரத்து வசதி உள்ளது.
குரங்கணியில் இருந்து சுமார் 12 கி.மீ தூரமுள்ள மலைப்பகுதிக்கு குதிரைகள், கழுதைகள் மூலமாகத்தான் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதன்படி நாளை நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவிற்காக குரங்கணி அருகே உள்ள மலைக் கிராமங்களுக்கு குதிரைகள் மூலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டன.