நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் என தமிழ்நாட்டில் அனல் பறக்கும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் தேனி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தேர்தல் பரப்புரைக்காக தேனியில் தங்கியிருந்த அவர் எமக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
'தேனி தொகுதியில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருவேன். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் அனைத்து முயற்சிகளையும் உடனடியாக செய்வேன். தொகுதி மேம்பாட்டு நிதியை சமுதாயக் கூடங்கள், விளையாட்டு பூங்காக்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் செயல்படுத்தி தரப்படும்' என்றார்.