தேனி மாவட்டம் கம்பம் நகரின் மைய பகுதியான பத்திர அலுவலகம் அருகே இருதலை பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து சென்றது. திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்த பாம்பினை கண்ட அப்பகுதியினர், அதனை சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்றுவிட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் மேற்கு வனத்துறையினர் பாம்பை பிடித்து மணிகட்டி ஆலமரம் பகுதியில் விட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பிடிப்பட்டது சுமார் 3 அடி நீளமுள்ள இருதலை மணியன் பாம்பு வகையாகும். இரு தலை மணியன் பாம்பு குறுகிய மூக்கும், மிகச் சிறிய கண்களும், பளபளப்பான செதில்கள் கொண்டு உருளை வடிவில் தடித்த உடலுடன் இருக்கும். இது இரையை நெரித்துக்கொன்று பின்னர் உட்கொள்ளும் ஒரு வகை நஞ்சற்ற பாம்பாகும். இதனை தமிழில் மண்ணுளிப்பாம்பு என்றும், ஆங்கிலத்தில் இந்தியன் பொவா என்றும் கூறுவர்.
இப்பாம்புகள் சுமார் இரண்டு அடி நீளம் உடையவை. அரிதாக சில சமயம் மூன்று அடி வரையும் இதன் வளர்ச்சி இருக்கும். இது செம்பழுப்பு, சாம்பல் நிறம் அல்லது மஞ்சள்-பழுப்பு நிறத்தில் இருக்கும்.
மண்ணுளி பாம்பை வைத்து கிளம்பும் புரளி:
இந்த பாம்புகள் பயமும், கூச்சமும் நிறைந்ததாகும். இந்த பாம்பிலிருந்து ஆஸ்துமா, எலும்புருக்கி நோய், எயிட்ஸ் நோய் போன்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுவதாகவும் இதனை பிடித்து விற்றால் பல லட்சம் ரூபாய் விலை கிடைக்கும் என புரளி கிளம்பியதால், சிலர் ஆங்காங்கே திரியும் மண்ணுளி பாம்புகளை பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
அழியும் நிலையில் உள்ள இந்த பாம்புகளை பிடிப்பது வனச்சட்டப்படி குற்றமாகும். இங்கு வந்த இந்த பாம்பு தானாக ஊருக்குள் வந்ததா? அல்லது வேறு யாரேனும் பிடித்துவந்து விட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளபட இருக்கிறது என தெரிவித்தனர்.