தேனி: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்தமாவட்டமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தேனி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் தேனி மாவட்ட அதிமுகவினர் மாவட்டச்செயலாளர் சையது கான் தலைமையில் பெரியகுளம் அருகே உள்ள பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட பொருளாளர் சோலை ராஜ், முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான எஸ்.டி.கே ஜக்கையன், தேனி நகரச்செயலாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து பெரியகுளத்தில் மாவட்டச்செயலாளர்கள் தலைமையில் திடீர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெறும் பொதுக்குழு செயற்குழுக்கூட்டத்தில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், வேறு முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்காத வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் இந்த திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸின் கோட்டை வலுவிழக்கிறதா? ஈபிஎஸ்ஸை ஆதரித்த தேனி மாவட்ட அதிமுகவினர்!