போடிநாயக்கனூரில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், கம்பம் தொகுதி வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி வேட்பாளர் மகராஜன், பெரியகுளம் வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் பிரசாரத்திற்காக போடிக்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி, பன்னீர்செல்வத்தை மறைமுகமாகத் தாக்கி விட்டுச் சென்றிருக்கிறார். அவர் இந்த மாவட்டத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஓபிஎஸ் என்று பேசியிருக்கிறார். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தனர் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்படி விடாக்கண்டன் ஓபிஎஸ், கொடாக்கண்டன் இபிஎஸ்.
ஓபிஎஸ்க்கு மூன்று முறை முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தும், அவர் இந்த தொகுதிக்கு ஏதாவது செய்தாரா? ஜெயலலிதாவிற்கு உண்மையாக இருந்தாரா? ஒரு தியான நாடகத்தை நடத்தி ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் வேண்டும் என்று கேட்டார். ஆனால், துணை முதலமைச்சர் பதவி கொடுத்தபிறகு அதை மறந்து விட்டார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், ஓபிஎஸ்ஐ வைத்துக்கொண்டு உள்ஒதுக்கீடு என்ற ஒரு சட்டத்தை பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது அமைதியாக அதை பார்த்துக் கொண்டிருந்த ஓபிஎஸ், இப்போது அது தற்காலிக சட்டம்தான் என்கிறார். அவர் மட்டுமல்ல, அமைச்சர் உதயகுமாரும் தற்காலிகம் தான் என்று பேசியிருக்கிறார்.
உடனே இன்று பாமக நிறுவனர் ராமதாஸ், ஓபிஎஸ் அளித்த பேட்டியால் அதிர்ச்சி அடைந்ததாகவும், உடனடியாக முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசியபோது, வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தரமானதுதான் என்று சொன்னதாகவும் கூறியிருக்கிறார். எனவே மக்களை ஏமாற்றி எப்படியாவது வாக்கு வாங்க ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். நிச்சயமாக இனிமேல் சட்டமன்றத்திற்கு அவர்கள் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது.
நேற்று நடந்த தாராபுரம் பொதுக்கூட்டத்தில் எப்போதும் போல பொய்களை பேச வந்த பிரதமர் மோடியை பார்த்து, மோடிதான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார். இவ்வளவு நாட்கள் தன்னையே ஜல்லிக்கட்டு நாயகன் என்று விளம்பரப்படுத்திக்கொண்டு இன்று இது என்ன நடிப்பு. உண்மையில் ஜல்லிக்கட்டு வந்ததற்குக் காரணம், நம்முடைய இளைஞர்கள்தானே தவிர, அரசியல்வாதிகள் அல்ல. அப்படிப்பட்ட இளைஞர்களை ஓபிஎஸ் கொச்சைப் படுத்துகிறார்.
இதையும் படிங்க: இழிவாக பேசியதால் திமுகவிலிருந்து விலகினேன் - குஷ்பூ