தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயத்தில் சிறுத்தை, யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, கரடி, சிங்கவால்குரங்கு, சிறுத்தைப்பூனை என 60க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளன. பல்வேறு அரியவகை மரங்களும் உள்ளதால் வனத்துறையினர் வனத்தில் அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட நாராயணத்தேவன்பட்டி பீட் கூத்தனாட்சி வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்துப்பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வலம் வந்த பெண் யானை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுத்திருப்பதை பார்த்துள்ளனர். கம்பம் கிழக்கு வனச்சரகர் ஜீவனாவிடம் வனத் துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் இரவு நேரமானதால் வனத்துறையினர் அங்கிருந்து வன அலுவலத்திற்குத் திரும்பினர். இன்று காலை மீண்டும் சம்பவ இடத்திற்கு ரேஞ்சர் ஜீவனா வனத்துறையினருடன் சென்று பார்த்தபோது யானை படுத்த இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த மேகமலை வன உயிரின சரணாலய உதவி வன பாதுகாவலர் குகனேஷ் மற்றும் கால்நடை மருத்துவர்கள் காமேஷ்கண்ணன், கலைவாணன் ஆகியோர் யானை இறந்து கிடந்த பகுதியை ஆய்வுசெய்தனர். கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டன. இறந்து கிடந்த யானை சுமார் 25 வயதுடைய பெண் யானை எனவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முழுமையான பரிசோதனைக்குப் பிறகு யானை இறந்ததற்கான முழு விவரம் தெரியவரும் என வன உயிரின சரணாலய அலுவலர்கள் தெரிவித்தனர்.