தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் மலையடிவாரத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் வாழை, தென்னை, மா, இலவம் மரங்கள் உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த விவசாய நிலத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட பல வனவிலங்குகள் வாழ்கின்றன. எனவே, வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களில் புகுந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வந்ததால், விவசாயிகள் வனத்துறையிடம் புகாரளித்தனர்.
அதன் பேரில், வனத்துறையினர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாயக்கர் தொழு, எள்கரடு, பளியன்குடி ஆகிய இடங்களில் மட்டும் குறிப்பிட்ட தூரம் வரை அகழிகள் அமைத்தனர். தற்போது இந்த அகழிகள் சேதமடைந்துள்ளதால், இவ்வழியாக யானை, காட்டுப்பன்றி, கரடி போன்ற வன விலங்குகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு வைரபிரபு என்பவருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் கூட்டமாகச் சென்று சுமார் 1000க்கும் மேலான செவ்வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
வாழை மரங்கள் தார் போட்டு வெட்டும் தருவாயில் யானை சேதப்படுத்தியதால் 10 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் வீணாகியுள்ளன. தொடர்ந்து யானைகள் இப்பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்தி வருவதால், இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கல்லூரிப் பெண்கள் விடுதியில் நுழைந்த 8 அடி நீள சாரைப் பாம்பு - பீதியில் மாணவர்கள்
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "ஒருமாத காலமாக இப்பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்பகுதி விவசாயத்தைக் காப்பாற்ற இங்குள்ள விவசாய நிலங்களைச் சுற்றி அகழியோ, மின் வேலியோ அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் " என வலியுறுத்தினார்.
மேலும், அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நாங்கள் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பாதிக்கப்பட்ட விவசாயி வைரபிரபு தெரிவித்தார்.