தேனி: தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த அணையின் முழு உயரம் 142 அடியாக உள்ளது. இந்நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு சுமார் 1500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் சுருளி ஆறு பகுதிகளில் இருந்தும் காட்டுப் பாதைகளில் இருந்தும் வரும் மழை நீர் முல்லை பெரியாற்றின் கலந்து வருவதால் தற்போது அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றுப்படுகையில், தண்ணீர் பாலத்தை தொட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போடி மெட்டு மலைச்சாலையில் மண்சரிவு: தமிழ்நாடு-கேரளா இடையே போக்குவரத்து பாதிப்பு!
முல்லை பெரியாறு அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீரானது முல்லைப் பெரியாற்றின் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் போன்ற ஊர்களின் வழியாக சென்று வைகை அணையில் கலக்கிறது. இந்நிலையில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, போன்ற பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
மேலும் தண்ணீரின் வேகம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் யாரும் முல்லைப் பெரியாற்றங்கரை பகுதியில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வாகனங்களை கழுவவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்லக்கூடாது என தேனி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இது தொடர்பாக ஆங்காங்கே உள்ள முல்லைப் பெரியாற்று தடுப்பணை பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இன்று முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து 5987 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 1500 கன அடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.