தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியில் உள்ள ஊர்க்காவல் சாமி திருவிழா நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளான நேற்று கிராம மக்கள் ஆற்றிலிருந்து சாமி சிலையை அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இத்திருவிழாவில் ஜெயமங்கலம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், ஜெயமங்கலம் பேருந்து நிறுத்தப்பகுதியில் ஊர்வலமாக சென்ற சில இளைஞர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சென்றபோது அவர்களை காவல் துறையினர் இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதில், இளைஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் காவலர்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சாமி ஊர்வலத்தில் சென்ற பொதுமக்கள் சிதறி ஓடினர். பின்னர் காவல் துறையினர் கல்வீசி வீசிய இளைஞர்கள் ஆறு பேரை விரட்டிப் பிடித்தனர்.
மேலும் ஜெயமங்கலம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.