தேனி: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில், 18ஆம் கால்வாய் தந்தை பெரியார் கால்வாய் மற்றும் பிடிஆர் கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காகத் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் உள்ளிட்ட கோரிக்கை மனு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், “18 ஆம் கால்வாய்க்கும், பி.டி.ஆர் கால்வாய்க்கும் தண்ணீர் திறக்க தாமதம் ஏற்படக் காரணம், அரசு உத்தரவின் படி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு மேலூருக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கு, முதல் போகத்திற்கு இன்னும் தண்ணீர் கொடுத்து முடிக்க வில்லை. இரண்டாம் போகத்திற்குத் தண்ணீர் திறக்கவில்லை. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
அந்த விசாரணை மூலம், முல்லைப் பெரியாறு அணையில் இருக்கும் தண்ணீரை மேலூருக்குக் கொடுக்கப்படுமா இல்லை பங்கீட்டு வழங்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பு 8,592 கன அடி மற்றும் கேரளாவில் மழை இல்லை மற்றும் நீர் வரத்து இல்லை.
மேலும், நமக்கு நீர் தேவையாக இருப்பது 16,962 கன அடியாக இருக்கிறது. இதனால், குடிநீர்க்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. உண்மை நிலை அறியாமல் போராட்டம் பண்ணக்கூடாது. நீர் வரத்துக் குறைவாக இருப்பதனால் இரு கால்வாய்களுக்கும் நீர் திறக்கவில்லை என்பதே உண்மை நிலை. தண்ணீர் குறைவாக இருந்தால் திறப்பதற்கு வாய்ப்பில்லை. விவசாயிகள் விவசாயப் பணிகளைத் துவக்கச் சற்று காத்திருக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.. !