குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு ஆதரவாக பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜக மாநில நிர்வாகிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் பாஜக மகளிரணி மாநிலத் தலைவர் மகாலட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நடைபெற்றது. முன்னதாக தேனியில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய பாஜக மகளிரணி மாநிலத் தலைவர் மகாலட்சுமி, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கின்ற எந்தவொரு இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தூண்டுதலால் அப்பாவி இஸ்லாமியர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராடுகிறார்கள். இந்த சட்ட திருத்தம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் என்ன பாதிப்பு என்று அவர்கள் கேட்டால் எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்லத்தெரியவில்லை. விடிந்து எழுந்ததும் ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் வெறும் வாக்கு வங்கிகக்காக மட்டுமே அவர் சிந்தித்து கொண்டிருக்கிறார். எனவே அவரது சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாடு சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தானில் 18 விழுக்காடு இருந்த இந்துக்கள் தற்போது 2.6 விழுக்காடாக குறைந்துள்ளனர். ஆனால் இதற்கு மாற்றாக 9.5 விழுக்காடு இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தற்போது 14.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் மூலம் அனைத்து உரிமைகளோடும், மகிழ்ச்சியாக, சந்தோஷமாகவும் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில் 135 இஸ்லாமிய பயங்கரவாதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 35 பேர் இருப்பது வருத்தமளிக்கிறது” என்றார்.