தேனி
சாலை விபத்தில் பலியான குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் கூலி தொழிலாளிகளுக்கும் தமிழக துணை முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி அருகே நேற்று முன்தினம் விவசாய கூலியாட்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் மஞ்சளாறு பகுதியை சேர்ந்த 3 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் பெரியகுளம் மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்ற தேனி மாவட்ட தொழிலாளர்களின் வாகனமும் கொண்டை ஊசி வளைவில் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த போடி தோப்புப்பட்டி, பண்ணத்தோப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.