தேனி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 43 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில், மீதமிருந்த 42 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். இதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு தேனி மாவட்டம் மாறியது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மற்றும் வெளி மாநிலம் சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தற்போது வரை புதிதாக 35 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து, தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் மருத்துவம், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'பச்சை மண்டலமாக மாறிய கோவை': நன்றி தெரிவித்த அமைச்சர்