கள்ளர், மறவர், சேர்வை வலையர் உள்ளிட்ட 68 சாதியினரை டி.என்.டி எனப்படும் சீர்மரபினர் பட்டியிலில் இணைக்கக்கோரி அச்சமுதாய மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது வழங்கப்படும் டி.என்.சி பட்டியலில் இருந்து டி.என்.டியாக மாற்றக்கோரியும், இரட்டைச் சான்றிதழ் நடைமுறையை ரத்து செய்து ஒற்றைச் சான்றிதல் வழங்கக் கோரியும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் இன்று (டிச.27) தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். பெரியகுளம் வள்ளுவர் சிலையில் இருந்து தென்கரை அக்ரஹாரத்தெருவில் உள்ள ஓ.பி.எஸ்-இன் இல்லம் நோக்கி பேரணியாக சென்றவர்களை பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
காவல்துறையினரின் தடுப்பை மீறியும் சிலர் துணை முதலமைச்சர் இல்லம் நோக்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அக்ரஹாரத் தெரு நுழைவாயிலில் இரு புறமும் கயிறு கட்டி போராட்டகாரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் சாலையில் அமர்ந்த சீர்மரபினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து துணை முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற சுமார் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் - ஈஸ்வரன்