மத்திய அரசு 2015ஆம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் உட்பிரிவை உருவாக்கி டிஎன்டி (Denotified caste) பிரிவினருக்கு 9 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க உறுதியளித்தது. அதனை நிறைவேற்றும் பொருட்டு 2017ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நீதிபதி ரோகிணி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு 12 வாரத்தில் பட்டியலைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
ஆனால் எந்தவித காரணமுமின்றி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 31ஆம் தேதியோடு, 27 வாரங்கள் முடிவடைகிறது. எனவே மத்திய அரசு டிஎன்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை விரைந்து முடிக்க வலியுறுத்தி 14 மாவட்டங்களில் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தேனி மாவட்டத்தில் உள்ள சீர் மரபினர் நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது உடலில் நாமம் இட்டு அரை நிர்வாணத்துடன் நூதன முறையில் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையம் 12 வாரத்தில் இட ஒதுக்கீடு பட்டியலைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். தற்போது 27 வாரங்களாகியும் அதனைச் சமர்ப்பிக்கவில்லை. மேலும், இந்த ஆணையத்திற்கு 6 மாத கால அவகாசம் அளிக்க தற்போது மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது டிஎன்டி பிரிவினர் இழைக்கும் அநீதியாகும். 1993 தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டப்படி, 2015ஆம் ஆண்டு வழங்கியுள்ள ஓபிசி உள்ஒதுக்கீடு திட்டத்தை மாற்ற எந்த ஆணையத்திற்கும் அதிகாரமில்லை.
48 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பல ஆணையங்களின் பரிந்துரைகளையும் மீறி முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி உடனே நாடு முழுவதும் கொண்டுவந்த மத்திய அரசு, 75 ஆண்டுகளாக டிஎன்டி பிரிவினர் மட்டும் போக்கு காட்டிவருகிறது
எனவே, நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையத்திற்கு மேலும் கால அவகாசம் நீட்டிக்காமல் உடனடியாக டிஎன்டி பிரிவைனருக்கு 9 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையெனில் அமைதியான முறையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மேடையில் வைத்து மகனை எச்சரித்த துரைமுருகன்