தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஓபிசி, டிஎன்டி சமூக மக்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், "2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஓபிசி வகுப்பையும் சேர்க்க வேண்டும், 2021 சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவையும் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 2011ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும்" என வலியுறுத்தினர்.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி காதில் பூச்சுற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மதுரை சாலையிலிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், கோரிக்கை மனுக்களை இருவர் மட்டும் உள்ளே சென்று பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "மருத்துவச் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துதல், ஓபிசிக்கு தனி திட்ட ஒதுக்கீடு, 50 சதவீத கிடைமட்ட பெண்கள் ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட ஓபிசி, டிஎன்டி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வியாக, விவாதமாக கொண்டுவர வேண்டும். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி போராடுவோம்" எனத் தெரிவித்தனர்.