வழக்கறிஞர்கள் மீது காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் எந்தவித விசாரணையுமின்றி அவர்களை இடைநீக்கம் செய்யலாம் என, அண்மையில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டது.
அதன்படி, தற்போது வரை 14 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நேற்று (செப்.22) தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி, லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக தேனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பார் கவுன்சிலின் இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், "பழிவாங்கும் நடவடிக்கையால் தொடுக்கப்ப்படும் பொய் வழக்குகளில் சேர்க்கப்படும் வழக்கறிஞர்கள், இந்த உத்தரவின்படி இடைநீக்கம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
வழக்கறிஞர்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ள இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" எனத் தெரிவித்தனர்.