இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளைபொருள்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏற்படாமல் இருக்க, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தேனி (தொடர்பு எண்: 9442009901), தேனி விற்பனைக்குழு செயலாளர் (தொடர்பு எண்: 9443423734) ஆகியோரை தொடர்புக் கொண்டு விளைபொருள்களை விற்பனை செய்து பயன் அடையலாம்.
காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது விளைபொருள்களை தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு வசதியாக தேனி, சின்னமனூர், கம்பம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள குளிர்பதனக் கிடங்குகளில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் இலவசமாக இருப்பு வைத்து பயனடையலாம்.
மேலும் பொதுமக்களுக்கு நியாயமான விலையில், தரமான காய்கறிகள், பழங்களை வழங்கிடவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்திட தேர்வு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
தற்போது நெல், சிறு தானிய வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, வெல்லம், வாழை, திராட்சை, காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருள்களை விவசாயிகள் விற்பனை செய்யும் போது, வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படும் வழக்கம் இருந்துவருகின்றது.
தற்போது நிலவிவரும் இந்த நெருக்கடி சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவதற்காக, வியாபாரிகள் செலுத்திடும் 1 சதவீத சந்தைக் கட்டணமும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மேற்கண்ட வசதிகளை அனைத்து வேளாண் பெருமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொண்டு, தேனி மாவட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் எவ்விதத் தடையுமின்றி கிடைத்திட உதவிட வேண்டும்" என அவர் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க :குரங்குகளுக்கு உணவளிக்கும் ஊராட்சித் தலைவர் -பொதுமக்கள் பாராட்டு