தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து கலங்கிய நீரை வெளியேற்றிய போது அணையில் இருந்த மீன்கள் உயிரிழந்தால், அவற்றை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக சோத்துப்பாறை அணை விளங்குகிறது.
இந்த அணையில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் கும்பலால் தண்ணீர் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே அணையில் மீன்கள் செத்து மிதப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, கடந்த 2 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு அணையில் இருக்கும் கலங்கிய நீரை வெளியேற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
இதனிடையே, பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அணையில் பழுதாகி உள்ள ஷட்டர் பழுதுநீக்கம் பணிகளையும், அணையின் வெளிப்பகுதியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணிகளையும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதோடு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: முதல்வரை சந்தித்த ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதி