கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நிலங்களுக்கான தண்ணீர் தாகத்தை பூர்த்தி செய்து, தென் தமிழ்நாட்டின் ஜீவநாடியாகத் திகழ்கிறது.
அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 104 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டின் குடிநீர் தேவைக்கும், அதே நீர்மட்டம் 125அடிக்கு மேல் உயர்ந்தால் பாசன தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுவது நடைமுறை.
இந்த நடைமுறையின் மூலம் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர், பி.டி.ஆர், தந்தைப் பெரியார் கால்வாய் பாசனங்களில் உள்ள 5,000 ஏக்கரில் இரு போகம், வைகையில் இருந்து கண்டந்திரி வரையில், 45,000 ஏக்கர் இரு போகம், கண்டந்திரி முதல் இடையநல்லூர் வரை உள்ள 1,15,000 ஏக்கரில் ஒரு போகம், திருமங்கலம் கால்வாய் பாசன பகுதியில் உள்ள 10,000 ஏக்கர் ஒரு போகம் என, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள ஏறக்குறைய 1,90,000 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி அடைகின்றன.
இதுதவிர கூடலூரில் இருந்து போடி வரையிலான 18 ஆம் கால்வாய் மூலம் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் தேனி, மதுரை மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் முல்லைப் பெரியாறு அணை திகழ்கிறது. இந்த நிலையில், தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வரை 113 அடியாக சரிந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் வறண்டு காட்சியளிக்கின்றன. மேலும் தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து முதல் போக சாகுபடிக்குத் தயாரான கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வதற்காக கடந்த ஒன்றரை மாதமாக காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'மே மாதம் இறுதியில் பெய்யும் கோடை மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கும். அதன்பின்னர், கேரளாவில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததும், ஜூன் முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்படும்.
முதற்கட்டமாக, நாற்றாங்கால் பாவுவதற்கு 200 கன அடியும், அதனைத் தொடர்ந்து 20 நாட்களுக்குப் பின்னர் 600 கன அடியாகவும் அதிகரித்து, ஜூலை முதல் வாரத்தில் 900 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம், கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள 14,707 ஏக்கர் நிலங்களில் இரு போகம் நெல் சாகுபடி நடைபெற்று வந்தன.
ஆனால், நீர்மட்டம் உயரம் குறைப்பு, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை இல்லாதது போன்ற காரணங்களால், இரு போக சாகுபடி நடைபெற்று வந்த முல்லைப் பெரியாறு அணையின் தலைமதகுப் பகுதியான கம்பம் பள்ளத்தாக்கு ஒரு போகமாக மாறியது. தற்போது ஜூலை மாதம் இரண்டாவது வாரம் ஆரம்பமாகியும், அணையின் நீர்மட்டம் உயர்வதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இதனால் இந்த ஆண்டு ஒரு போக நெல் சாகுபடி கூட கேள்விக்குறியாக உள்ளது.
முதல் போக நெல் சாகுபடியை ஜூன் மாதத்தில் தொடங்கி நெல் மணிகள் வளர்ந்து, தற்போது களைச்செடிகள் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டிய சூழலில், நிலத்தை தரிசாகவும், வெறுமனே களைச் செடிகள் வளர்ந்தும் கிடக்கின்றன. கரோனா நோயால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்நேரத்தில், இயற்கையும், எங்களுக்கு கை கொடுக்காததால் தற்கொலைக்கு ஆளாகும் சூழல் உருவாகும் என்கின்றனர் விவசாயிகள்.
எனவே காலம் கடந்து முதல் போக சாகுபடி தொடங்கும் வேளையில் நாற்று, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்ட இடுபொருள்களையாவது, மானிய விலையில் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் என, கண்ணீருடன் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்திட வேண்டும் என்பது தலைமதகுப் பகுதியான கம்பம் பள்ளத்தாக்கு மட்டுமின்றி கடை மடையான இராமநாதபுரம் பகுதி வரையில் உள்ள 5 மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
![சமன் செய்யப்பட்ட விவசாய நிலம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-01-spl-cumbum-valley-farmers-suffered-script-7204333_14072020171555_1407f_02085_342.jpg)
இதையும் படிங்க: டாக்டர்கள் இல்லை... முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் - மீளுமா விருதுநகர்?