தேனி மாவட்டம் கூடலூர் அருகே எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது காஞ்சிமரத் துறை சாலை. இந்த சாலை வெட்டுக்காடு, பளியன்குடி, காஞ்சிமரத் துறை உள்ளிட்ட பகுதிகளின் பிரதான சாலையாகத் திகழ்கிறது. இது கடந்த சில வருடங்களாக பராமரிப்பின்றி முழுவதும் சேதமடைந்துவிட்டது.
இச்சாலையை சீரமைக்கக் கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிமரத் துறை பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனினும், சாலையை சீரமைக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, மழைக்காலம் என்பதால் சேதமடைந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாய் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், காஞ்சிமரத் துறை சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தண்ணீர் தேங்கிய சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு விபத்தோ, பூச்சிக்கடியோ, உடல்நலக்குறைவோ ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
அதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றும் இந்தச் சாலையை விரைவில் சீரமைக்காவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியிரிடம் ஒப்படைத்துவிட்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : பிற மாநில படகுகளுக்கான அனுமதி வழக்கு: ஆட்சியர், மீன்வளத்துறை அலுவலருக்கு நோட்டீஸ்!