சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், தற்போது நம் நாட்டிலும் அதன் பாதிப்பு தென்படத் தொடங்கியுள்ளது. சீனாவிலிருந்து கேரளா மாநிலம் திருச்சூருக்கு திரும்பிய மருத்துவ மாணவிக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் மருத்துவக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, ஏலத்தோட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் சென்றுவருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், மூணாறு, தேக்கடி உள்ளிட்ட இடங்களுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தேனி வழியாகச் சென்றுவருகின்றனர். இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள கேரள எல்லைப் பகுதிகளான போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய மலைச்சாலை வழியாகச் செல்கின்ற வாகனங்களை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.
இதற்காக குமுளி மலைச் சாலையில் லோயர்கேம்ப்பிலும், போடி மெட்டு மலைச்சாலையில் முந்தல் பகுதியிலும், கம்பம் மெட்டு மலைச்சாலையில் பழைய சோதனைச்சாவடி ஆகிய இடங்களிலும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து தேனி மாவட்டம் வழியாக தமிழ்நாடு வருகின்ற அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்பிற்குள்படுத்தப்படுகின்றன.
கேரளாவிலிருந்து வருகின்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டும், பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் சளி, காய்ச்சல், வறட்டு இருமல் உள்ளிட்ட தொந்தரவு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.