தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம், போடி காவல் நிலையத்தில் பணிபுரியும் 10 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த காவல் நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன்பு மோசடி வழக்கு தொடர்பாக ஈரோட்டைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை அழைத்து வந்து விசாரணை நடத்தி, சிறையில் அடைத்துள்ளனர். பின்னர், சிறையில் இருந்த குற்றவாளிக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, கைதியை விசாரணை செய்த காவலர்கள் உட்பட போடியைச் சேர்ந்த 30 காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்தப் பரிசோதனையின் முடிவில், போடி நகர் காவல் சிறப்பு ஆய்வாளர் ஒருவர், காவலர்கள் எட்டு பேர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக போடி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.
மேலும், காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : மதுபானக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்!