தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள்? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "அதற்காகத் தான் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவ ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்புகொண்டால், தேவையான உதவிகளை செய்துக் கொடுப்பார்கள்"என்றார்.
இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்படும் மன ரீதியிலான பாதிப்பைச் சரி செய்ய தீவிர நடவடிக்கை தேவை என்பதை நிரூபிக்கும் வகையில், தேனி மாவட்டம் போடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போடி அருகேயுள்ள ஜக்கமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்கடன் (32). இவர் இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கரோனா அச்சம் காரணமாகச் சொந்த ஊருக்கு வந்தார். இவரை, மாவட்டச் சுகாதாரத்துறை, வீட்டுக்கண்காணிப்பில் வைத்துள்ளது. தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட இவர், மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று உடலில் ஆடை ஏதும் இன்றி சாலைகளில் சுற்றித்திரிந்துள்ளார்.
அப்போது, பக்தசேவா தெருவில் தனது வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த 90 வயது மூதாட்டியான நாச்சியம்மாளை கழுத்தில் கடித்துள்ளார். பின்னர் நாச்சியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மணிகண்டனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களையும் மணிகண்டன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில், அனைவரும் சேர்ந்து மணிகண்டனை பிடித்து கயிற்றால் கட்டிப்போட்டனர். இளைஞர் கடித்ததில் படுகாயமடைந்த நாச்சியம்மாள், போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
மணிகண்டன் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், உடனடியாக போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், படுகாயமடைந்த நாச்சியம்மாள், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், "மூதாட்டியை கடித்த போது, அருகே இருந்தவர்கள் உடனடியாக மணிகண்டனை பிடித்துக் கட்டிப்போட்டனர்.
அவரது கையில், சுகாதாரத்துறையின் சீல் வைக்கப்பட்டிருப்பதை வைத்தே, அவர் கரோனா கண்காணிப்பில் இருப்பது தெரியவந்தது. மன நிலை பாதிக்கப்பட்டது போல நடந்துகொண்டார். தற்போது மூதாட்டி இறந்துள்ள நிலையில், மணிகண்டன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் ஆலோசனையின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர். மேலும் கரோனா கண்காணிப்பில் இருந்த மணிகண்டன், தெருவில் சுற்றித்திருந்தது மட்டுமல்லாமல், வீட்டு வாசலில் படுத்திருந்த மூதாட்டியைக் கடித்து கொலைச் செய்தச் சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'கரோனா நோயாளிகள் ஓட, ஒளிய முடியாது'- வந்துவிட்டது புதிய செயலி