தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிபுரிந்துவரும் 32 வயதுடைய பெண் மருத்துவர், 49 வயது பெண் சித்தா மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை ஊழியர்கள் என ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்த 8 பேர் உள்பட இன்று (ஜூலை 31) ஒரே நாளில் 299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,028ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் உயிரிழந்ததையடுத்து, மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தற்போது வரை 2,786 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2,180 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா தொற்றால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.