மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று (அக். 19) தேனியில் ’உழவன் உரிமை மீட்பு போராட்டம்’ என்ற பெயரில் மாநாடும், 200க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பேரணி செல்லவும் திட்டமிடப்பட்டது.
ஆனால், டிராக்டர்களை போராட்டத்திற்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி முன்னதாகத் தெரிவித்து பேரணிக்கு அனுமதி மறுத்திருந்தார்.
இந்நிலையில், தடையை மீறி இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக வந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் ராமசாமி உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து, தடையை மீறி நேரு சிலையை நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஓடினர். இந்நிலையில் பேரணி செல்ல முயன்ற கே.எஸ்.அழகிரி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு காவல் துறை வாகனத்தில் ஏற்றப்பட்டார்.
இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து அவ்விடத்தில் தேனி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மௌலானா ஆரூண் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தச் சாலை மறியலால் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதையும் படிங்க: கல்விக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்த கூடாது: ஜி.ராமகிருஷ்ணன்