விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நடந்த செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், 'தேனியில் ஆரத்தி என்ற பெயரில் பெண்களுக்கு 1000 ரூபாய் தட்டில் போடுகிறார்கள். இதைத் தேர்தல் ஆணையம் கண்ணை மூடி வேடிக்கை பார்க்கிறது. அதிகளவு தேனியில் பணம் புழங்குகிறது. இதற்கு காவல் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. தேனியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
கன்னியாகுமரியிலும் தேனியிலும் பணம் அதிகமாக ஆளும் கட்சியினர் மக்களுக்கு வழங்கிவருகின்றனர். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமார் தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் திணறிவருகிறார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏழை மக்கள் அளித்த தேர்தல் நிதியைத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியது கண்டனத்திற்குரியது. வருமானவரித் துறைக்குப் பணம் எங்கு உள்ளது எனத் தெரியும் இருந்தாலும் அவர்கள் ஆளும் கட்சியினரைக் கண்டு கொள்ளவில்லை.
துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனை ஏன் முதலமைச்சர் வீட்டிலோ, துணை முதலமைச்சர் வீட்டிலோ நடைபெறவில்லை. அதிமுகவினர் வீட்டிலும் பாஜகவினர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட வேண்டும்' என தெரிவித்தார்.
வயநாடு தொகுதியில் ராகுல் ஏன் போட்டியிடுகிறார் எனச் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, மோடி தென்னிந்தியாவைப் புறக்கணித்து வருகிறார், அதனால் நானே ராகுலைக் கன்னியாகுமரியில் போட்டியிடச் சொன்னேன். அதுபோல தென்னிந்தியாவில் ராகுல் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவித்தனர். அதனால்தான் ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் இடதுசாரிகளுடனா கருத்து வேறுபாடு விரைவில் சரி செய்யப்படும் என பதிலளித்தார்.
மோடி ஆட்சியில் தான் நாடு பாதுகாப்பாக உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை செய்து வருகிறார். அதற்கு தங்கள் கருத்து என்ன செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’ராணுவ கோப்புகளையே பாதுகாப்பாக வைக்க முடியாத மோடி நாட்டை எப்படிப் பாதுகாப்பாக வைப்பார்’ எனக் கூறினார். மேலும், தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மாணிக்கம் தாகூர் உறுதுணையாக இருப்பார் அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.