தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர், கைலாசபட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆகிய இருவருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், வெளி மாவட்டங்களிலிருந்து பெரியகுளம் வந்தவர்கள் எனக் கடந்த ஒரு வாரத்துக்குள் 33 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெரியகுளம் பகுதியில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவருவதைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம், முதற்கட்டமாகக் கடைகள் செயல்படும் நேரத்தைக் காலை 8 மணிமுதல் மதியம் 1 மணிவரை குறைத்து நடவடிக்கை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பெரியகுளம் நகராட்சி ஆணையர் தலைமையில் வணிகர்கள், அனைத்து சங்க நிர்வாகிகளுடனான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பெரியகுளம் நகராட்சியில் இன்று மாலை 5 மணிமுதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து வணிகக் கடைகளும் திறப்பதற்குத் தடைவிதிக்கப்படுகிறது. மேலும், ஆட்டோ, டாக்சி, இருசக்கர வாகனம், அரசு, தனியார் பேருந்துகள் இயக்கவும் தடைவிதித்து போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்படுகிறது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக அரிசி, பருப்பு, மசாலா, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் இல்லங்களுக்கே விநியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முழு ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும்வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கை மீறுவோர் மீது காவல் துறை, நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் ஒரே நாளில் 533 மருத்துவ முகாம்கள்!