தேனி: கம்பம் நகர் பகுதியில் சூர்யா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளராக கம்பம் நகராட்சி துணை சேர்மன் சுனோதா மற்றும் அவரது கணவரான செல்வகுமார் ஆகியோர் உள்ளனர். இருவரும் கம்பம் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.
இந்நிலையில், தங்கள் ஜவுளி நிறுவனத்தில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தால் அவர்களுக்கு மாதம் மாதம் அதிக வட்டி தருவதாகவும், நான்கு வருடங்கள் கழித்து முதலீடு செய்த மொத்த பணத்தை திருப்பி தருவதாகவும் கூறி சுமார் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து மூன்று கோடி வரை பணத்தை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்களிடம் வாங்கிய பணத்திற்கு "கடந்த இரண்டு வருடங்களாக கரோனா உள்ளிட்ட பல காரணங்களை கூறி மாதம் மாதம் கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட தவணை பணத்தை கொடுக்கவில்லை என்றும், இது குறித்து அவர்களிடம் கேட்கும்போதெல்லாம் இப்போது தருகிறேன் அப்போது தருகிறேன்" என்று காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர்,பணம் கொடுத்த அனைவரும் சேர்ந்து கேட்டபோது, "தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதோடு நாங்கள் ஆளும் கட்சியினர் எங்களை ஒன்று செய்ய முடியாது" என்று மிரட்டல் விடுத்ததாக பணத்தை இழந்தவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் தினகரன் கூறுகையில், "நாங்கள் 45 பேர் கடந்த 2020 ஆம் ஆண்டு 6 லட்சம் முதலீடு செய்தோம் ஆனால் கடந்த 2 வருடமாக கரோனா உள்ளிட்ட காரணங்களை கூறி ,எந்த தொகையும் திருப்பி தரவில்லை. இது குறித்து அவர்களிடத்தில் சென்று முறையிட்ட பொழுது எங்கள் நிறுவனம் நஷ்டம் ஆகிவிட்டது அதனால் மேலும் 3 லட்சம் ரூபாயை முதலீடு செய்யச் செல்லி கட்டாயப் படுத்தினார்கள்.
ஏற்கனவே முதலீடு செய்த பணத்திற்கே கடந்த 2 வருடங்களாக எந்த ஒரு தொகையும் திருப்பி தராததால் நாங்கள் முதலீடு செய்யவில்லை இருப்பினும் சிலரை வற்புறுத்தி பணத்தைச் செலுத்த வைத்தார்கள்.மீண்டும் இதுகுறித்து கணக்கு கேட்டல் எங்களை அரசியல் பின்புலத்தை வைத்தும்,வக்கீல்களை வைத்தும் மிரட்டுகிறார்கள்.எனவே சுமார் மூன்று கோடிக்கு மேல் பண மோசடி ஈடுபட்ட திமுக நகர துணை சேர்மன் மற்றும் திமுக நிர்வாகியான அவரது கணவர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்" என பாதிக்கபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "மகளிர் உரிமைத் தொகை தாருங்கள் முதல்வரின் மகனே" - உதயநிதி காரை வழிமறித்து பெண்கள் மனு!