தேனி: கடந்த சில நாட்களாக கேரளா மக்களை அச்சுறுத்தி வந்தது, அரிக்கொம்பன் என்னும் ஒற்றை காட்டு யானை. கேரளாவில் இதுவரை 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை இந்த யானை ஏற்படுத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கேரளா எல்லைப் பகுதியான மூணாறு பகுதியில் இந்த யானை அட்டகாசம் செய்து வந்தபோது, கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர்.
பின்னர் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை விடப்பட்டது. மேலும், இந்த யானையை சமீபத்தில் அனைவரும் ‘கொம்பன்’ என்று அழைத்து வந்தனர். அதன் பிறகு கடை, ரேஷன் கடை என அனைத்து இடங்களையும் சூரையாடி அரிசியை யானை உண்டு வந்தது.
அங்கு அரிசி கிடைக்கவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் சமயலறைகளை உடைத்து, அங்கிருந்து அரிசியை உண்டு செல்லும். ஆகையால், அப்பகுதி மக்களால் இது அரிசிக் கொம்பன் என்று அழைக்கப்பட்டது. பிறகு காலப்போக்கில் அது அரிக் கொம்பனாக மாறி விட்டது.
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த அரிக்கொம்பன், மேகமலை பகுதிகளில் சுற்றி வலம் வந்தது. ஆகையால், அரிக்கொம்பனை பிடிக்கும் வரை மேகமலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் வனப்பகுதிக்குள் வலம் வந்த அரிக்கொம்பன், கடந்த மே 26ஆம் தேதி இரவு ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்குள் இடம் பெயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன் பிறகு, கடந்த 27ஆம் தேதி அரிக்கொம்பன் யானை கம்பம் பகுதிக்குள் உணவு தேடி உலா வந்து பொதுமக்களை விரட்டி அட்டகாசம் செய்தது. பின்னர், கம்பம் பகுதிக்குள் இருக்கின்ற தனியார் தோட்டத்திற்குள் புகுந்து தஞ்சம் அடைந்தது.
மேலும், கம்பம் பகுதிக்குள் வந்து பொதுமக்களை விரட்டியபோது, ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்குள் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் விதமாக அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தோட்ட வேலைகளுக்கு விவசாயிகள் செல்வதையும் வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
பின்னர், அரிக்கொம்பனை பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரிக்கொம்பன் யானையானது அடர் வனப்பகுதிக்குள் புகுந்து தஞ்சமடைந்தது. அதன் பின்னர் யானையை வனத்துறையினர் ஜிபிஎஸ் கருவி மூலமாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். பிறகு சமவெளி பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம் களக்காடு முணடந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் வனத்துறையினரால் விடப்பட்டது.
இந்த நிலையில், கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அறிவித்துள்ளார். மேலும் கடந்த 5 நாட்களாக தோட்ட வேலைகளை மேற்கொள்ள முடியாமல் வந்திருந்த விவசாயிகள், தற்போது அரிக்கொம்பன் பிடிக்கப் பட்டதால் தங்களது பணிகளை மேற்கொள்ள மகிழ்ச்சியாக சென்றுள்ளனர்.