பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பிலவேந்திர ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி. இவர் கருவுற்று ஆறுமாதமான நிலையில், பாத்திமாவுக்கு நேற்று முன்தினம் (ஜூலை 3) திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாத்திமா மேரிக்கு, நேற்று காலை (ஜூலை 4) பெண் குழந்தை பிறந்தது.
உடலில் திடீரென அசைவு
பிறந்து நீண்ட நேரமாகியும் உடலில் அசைவுகள் ஏதும் இல்லாததால், மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட இருந்த குழந்தையின் உடலில் திடீரென அசைவுகள் தென்பட்டது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை மீண்டும் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த குழந்தை இன்று (ஜூலை 5) காலை உயிரிழந்தது.
இதனையடுத்து ஆண்டிபட்டி வட்டாட்சியர், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள், தாமரைக் குளம் பகுதி கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவ மத வழக்கப்படி அடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை