தேனி: உத்தமபாளையம் யாதவர் தெருவைச் சேர்ந்த சோலைமுருகன் என்பவரது மனைவி வனிதா(35). சின்னமனூர் அருகே முத்துலாபுரம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று(நவ.20) கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள உறவினரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென வனிதா கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், வனிதா அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டுக் கொண்டே அடையாளம் தெரியாத நபரை விரட்டிச் சென்றதை அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பார்த்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு தப்பி ஓடிய நபரை பிடிக்க சென்றனர். மேலும் இது தொடர்பாக தகவலறிந்த உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு கம்பத்தைச் சுற்றி உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வயர்லெஸ் மூலம் குற்றவாளியைப் பிடிப்பதற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதைடுத்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சிலை மணி, சார்பு ஆய்வாளர் திவான் மைதீன், குற்றப் பிரிவு காவல்துறையினர் கம்பம் அண்ணாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாலையம்மாள்புரம் அருகே உள்ள மயானப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் கம்பம் கோம்பை சாலையில் உள்ள ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த விவேக்(35) என்பதும், இவர் வங்கி மேலாளரிடம் தங்கச் செயினை பறித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து வழிப்பறி செய்த தங்கச்செயினை மீட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விவேக்கை கைது செய்தனர்.
பெண்ணிடம் வழிப்பறி செய்த சில மணி நேரத்தில் குற்றவாளியை மடக்கிப்பிடித்த காவல்துறையினரை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.