தேனி: திமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி, தற்போது தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பதவி கிடைக்காத பலர் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான விமர்சனங்களையும் அதிருப்திகளையும் தெரிவித்து வரும் சூழலில், தேனி மாவட்டத்தில் திமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
கட்சிப் பதவியை பெறுவதற்காக கடந்த சில நாட்களாக திமுக உட்கட்சியினரிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. தற்போது இந்த மோதல் போக்கு கொலை வெறித்தாக்குதல் அளவுக்கு அதிகரித்துச்சென்றுள்ளது. தேனி தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருபவர் ரத்தின சபாபதி. இவருக்கும் வீரபாண்டி பேரூர் கழகச்செயலாளராகவும், வீரபாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் ஆன சாந்தகுமாருக்கும் இடையே உட்கட்சி பிரச்னை காரணமாக மோதல் இருந்து வந்தது.
இந்தச்சூழலில் நேற்று(ஜூலை.28) தேனி மாவட்டத்தில் உள்ள பேரூர் கழகத்திற்கு நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் வீரபாண்டி பேரூர் கழகச் செயலாளராக இருந்து வரும் சாந்தகுமார் என்பவருக்குப்பதிலாக செல்வராஜ் என்பவர் பேரூர் கழகச்செயலாளர் ஆக நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று இரவு வீரபாண்டியில் உள்ள ரத்தின சபாபதியின் வீட்டிற்குச்சென்றவர்கள், ரத்தின சபாபதியை உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் கடுமையாகத் தாக்குதல் நடத்தியும், வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறை தாக்குதலில் ரத்தின சபாபதி மற்றும் அவருடன் இருந்த முத்துக்குமார் என்பவருக்குப் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், காயமடைந்த அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தற்போது ரத்தின சபாபதி வீட்டுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் அனைத்தும் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீரபாண்டி பேரூர் கழக திமுக செயலாளரும், வீரபாண்டி பேரூராட்சி துணைத்தலைவருமான சாந்தகுமார் மற்றும் பெண் காவலர் கவிதா உள்ளிட்ட எட்டு பேர் மீது வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டி, தற்போது கொலை வெறித்தாக்குதல் அளவுக்குச்சென்ற நிலையில், இது தேனி மாவட்ட திமுகவினர் இடையே பெரும் பரபரப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காலில் கயிறு கட்டி இழுத்துச்செல்லப்பட்ட இறந்த உடல்- எஸ்.ஐ சஸ்பெண்ட்