தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் தலையில் கல்லை போட்டு மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடப்பதாக ராஜதானி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி தடயங்களை சேகரித்தனர். இதனையடுத்து, சடலத்தை உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பான விசாரணையில், ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி பாண்டியன் (45) என்பது தெரியவந்தது. இவருக்கு முத்தம்மாள் (38) என்ற மனைவியும், வெண்ணிலா (21), தமிழ்செல்வன் (12) ஆகிய இரு பிள்ளைகளும் இருப்பதும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதைதொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையில், பாண்டியனின் மனைவி முத்தம்மாளுக்கும், ஆசாரிபட்டியை சேர்ந்த சென்றாய பெருமாள் (45) என்பவருக்கும் கடந்த 8 வருடமாக பழக்கம் இருந்துவந்தாக கூறப்படுகிறது. இதனை பாண்டியன் கண்டித்ததை அடுத்து அவருடனான உறவை முத்தம்மாள் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சென்றாய பெருமாள், முத்தம்மாளை சந்தித்து மீண்டும் தன்னோடு பழக வேண்டும் எனவும் மறுத்தால் உன்னுடைய கணவனை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தெப்பம்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்த பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சென்றாய பெருமாள் அருகில் இருந்த கல்லை பாண்டியனின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்த நிலையில், நாகலாறு ஓடையில் பதுங்கி இருந்த சென்றாய பெருமாளை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.