மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் பெரியகுளம், போடி, உத்தமபாளையம், கம்பம் மற்றும் கூடலூர் பகுதிகளில் வசிக்கின்ற இஸ்லாமியர்கள் பல்வேறு போராட்டங்கள், கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கம்பம் வாவேர் ஜமாத் சார்பில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. கம்பம்மெட்டு சாலையில் உள்ள முகைதீன் பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி பாவலர் படிப்பகம் வழியாக புது பள்ளிவாசல் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியாகள் கலந்துகொண்டனர்.
பேரணயில் பங்கேற்றவர்கள், கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு இஸ்லாமியர்களை அப்புறப்படுத்த முயலும் அதிமுகவை புறக்கணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இந்தப் பேரணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுட்டனர்.
இதையும் படிங்க: ஆயிரக்கணக்கனோர் திரண்ட குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம்!