தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே தாடிச்சேரி பகுதியில் எஸ்கேஎம் என்ற கோழிப்பண்ணை நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25பேர் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இவர்களை அந்நிறுவனம் கோழிப்பண்ணையில் பணிபுரிவதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்துள்ளது. குடும்பம் சகிதமாக பண்ணையில் தங்கி இரவு, பகலாக வேலை செய்த நிலையில், இவர்களுக்கு நிறுவனம் முறையான ஊதியம் வழங்காமல் மறுதலித்துள்ளது. கொத்தடிமைகளைப் போல இத்தொழிலாளர்களை வதைத்ததுடன், அங்கு பணிபுரிந்த பெண்களும் பாலியல் ரீதியான தொந்தரவுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது.
கோழிப்பண்ணையில் இருந்து தங்களை மீட்டு சொந்த மாநிலத்துக்கு அனுப்பக் கோரி நேற்று (நவ.23) ஆட்சியர் அலுவலகம் முன்பாக மேற்கு வங்கத் தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அந்தத் தொழிலாளர்கள், ”ஆண்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும், பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்குவதாகக் கூறி முகவர் மூலமாக அழைத்து வரப்பட்டோம். எங்களிடம் போடப்பட்ட ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கப்படவில்லை.
ஆண்களுக்கு 8,700 ரூபாய், பெண்களுக்கு 7,500 ரூபாய் வீதம் தான் வழங்கப்பட்டது. இதைவிட கொடுமையானது தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்ததில் ராகேல்கான் என்ற 10வயது சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கு கூட சிறுவனின் பெற்றோருக்கு கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
கோழிப்பண்ணை கண்காணிப்பாளர் முத்து என்பவர் எங்கள் குழுவில் உள்ள 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வரும் கோழிப்பண்ணை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தத்தில் கூறிய படி வேலைக்கான தொகையை வழங்க வேண்டும்”என்றனர்.
நேற்று மாலையில் இருந்து இரவு வரையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட மேற்கு வங்க தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்று (நவ.24) அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அதுவரையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்குவதாகவும் கூறினார். அனைவரையும் காவல் துறையினர் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க:நிலக்கரி சாம்பல் கழிவால் பொசுங்கும் கால்கள்: நிவாரணம் கேட்கும் மக்கள்