தேனி: போடிநாயக்கனூர் வட்டாரத்தில் தொடர் மழை காரணமாக வயல்களில் பயிரிடப்பட்டதில் பாதிக்கும் மேலான வெங்காயங்கள் செடியிலேயே அழுகியதால், வெங்காயம் விலை உயர்ந்தும் விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப் பகுதிகளான பத்திரகாளிபுரம், விசுவாசபுரம், டொம்புச்சேரி ஆகிய பகுதிகளில் வெங்காயம் பெருமளவில் பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.
தற்போது போடிநாயக்கனூர் சுற்றுப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், விவசாயத் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், செடியிலேயே வெங்காயம் சேதமடைந்து அழுகியது. இதனால் அவை விற்பனைக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் தக்காளி விலை அதிகரித்ததை தொடர்ந்து, தற்போது வெங்காயமும் தினசரி விற்பனையில் விலை அதிகரித்து வருகிறது. வெங்காயத்தின் கொள்முதல் விலை உயர்ந்ததால், விவசாயிகளிடமிருந்து கிலோ ரூபாய் 80 முதல் 90 வரை அதன் தரத்தைப் பொறுத்து கொள்முதல் செய்யப்படுகிறது. சந்தை விலையில் கிலோ ரூபாய் 100 முதல் 120 வரை விற்பனையாகி வருகிறது.
ஆனாலும், செடியிலேயே பாதிக்கும் மேலான வெங்காயம் அழுகிப் போனதால் வெங்காயம் விலை அதிகரித்தும் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் போடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடரும் கனமழை: சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!