தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய இளைஞரணி மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்.4) நடைபெற்றது. தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் ப. செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 1960ஆம் ஆண்டுகளில் இளைஞர்கள் எவ்வாறு திமுகவில் இணைந்து ஒரு மாபெரும் கட்சியாக திமுக உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்களோ, அதைவிட பத்து மடங்கு இளைஞர்கள் தற்போது பாஜகவில் இணைந்துவருகின்றனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்பதற்குப் பேருந்து வசதி இல்லாத பகுதி மாணவர்களுக்கு, பாஜக இளைஞரணி சார்பில் இலவச பேருந்து வசதி செய்து தரப்பட உள்ளது.
இதற்காக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்டு சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே நீட் தேர்வில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "புதிய தேசிய கல்விக் கொள்கையை நாட்டில் அனைத்து மாநிலத்தவரும் ஏற்றுக்கொண்டுவருகின்றனர். என்ன படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கையால், ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தாய்மொழியில்தான் கற்க வேண்டும் என்ற சூழல் உள்ளது. எனவே புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு முதலமைச்சர் ஆதரவளித்து உடனடியாக அது பின்பற்றப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.