தேனி: போடி நகராட்சியில் 33 வார்டுகளும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரினால் நகராட்சியில் நிதி இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் போடி நகர பாஜக சார்பில் கையில் ஓடு ஏந்தி பொதுமக்கள், வணிகர்களிடம் யாசகம் பெற்று நகராட்சியில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
நேற்று (நவ. 28) நடந்த இந்த போராட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் தண்டபாணி, போடி 9 ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட 100 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் போடி பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை கையில் ஓடு ஏந்தி சென்றனர். அதோடு கழுத்தில் நகராட்சியை கண்டித்து பதாகைகள், மாலை போட்டுக்கொண்டும் யாசகம் பெற்றனர்.
யாசகம் பெற்று முடித்த பின்பு, போடி நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இருவரை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். அதன்படி போடி நகராட்சி 9 ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் தண்டபாணி ஆகியோர் நகராட்சி அலுவலகத்துக்குள் சென்று மக்களிடம் யாசகம் பெற்ற பணத்தை நகராட்சி அலுவலகத்தில் வைத்துவிட்டு சென்றனர்.
இதையும் படிங்க: 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன உத்தரப்பிரதேச பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு