பெரியகுளம்: சட்ட மேதை அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று (ஏப்ரல் 14) கொண்டாடப்பட்டது. அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில், அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக ஒரே சமூகத்தை சேர்ந்த இருபிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இரு பிரிவினரையும் போலீசாருக்கு அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது வன்முறையில் ஈடுபட்ட சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். காவல் நிலையத்தின் மீதும் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பெரியகுளம் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையை தொடர்ந்த கும்பல், காவல் நிலையம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு முழுதுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், வன்முறையில் ஈடுபட்டதாக 70 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பெரியகுளம் காவல் நிலையம் செல்லும் சாலை மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் சாலையில், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
காவல் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர். தாக்குதலில் காவல்துறை ஆய்வாளர்கள் இருவர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட போலீசார் 15 பேர் காயம் அடைந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!