பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் பலவித போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 2) கேரளாவில் அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்களின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது.
காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை 12 மணி நேரம் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகள், வாடகை கார், ஜீப்கள் இயக்கப்படாமல் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட எல்லையான குமுளியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு காணப்பட்டன. அரசு, தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் நடமாட்டமும் குறைவாகவே காணப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு தினசரி வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள மற்ற இரு வழித்தடங்களான போடி மெட்டு, கம்பம் மெட்டு வரை இயக்கப்பட்ட பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மதுரை தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!